









வரலாறு
சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரியத்தின் சிந்தனை ஊற்று
சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரியத்தின் நாற்றங்காலாக இருந்தது மலேசிய சைவ சமயப் பேரவை. மலேசிய சைவ சமயப் பேரவை 2011ஆம் ஆண்டில் அமைக்கப்பெற்றது. சைவ சமயத்தைத் தனிப்பெரும் சமயமாக முன்னெடுப்பதும் தமிழரின் தலைமைச் சமயமாகச் சைவம் இருந்த வரலாற்றை முன்னிறுத்திப் பொது நிலையில் இந்துக்களுக்கும் சிறப்பாகச் சைவர்க்கும் உரிய வாழ்வியலாக மீட்டெடுப்பதும் சைவப் பேரவையின் கடமை என்று உணரப்பட்டது.
சைவப் பேரவைக்குச் சைவத்தின் மீதிலான கடமையை நிறைவேற்றுவதற்கு நிலையான பெருந்திட்டம் ஒன்று வேண்டும் என்று உணரப்பட்டது. இது குறித்து முனைவர் நாகப்பன் ஐயா தமது சித்தாந்த வகுப்பு மாணவருடன் பேசிக் கருத்தறிந்தார். மாணவர் அனைவரும் சைவத் திருக்கோயிலும் சைவ சமய மேம்பாட்டுக்குக் கல்லூரியும் அமைப்பதில் கருத்தொற்றுமை உடையவராய் இருந்தனர். சைவப் பேரவை நடத்திய அனைத்துலக சைவ சமய மாநாடுகளில் திட்டம் மக்கள் மன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
சிவபெருமான் திருவருளும் நால்வர் பெருமக்கள் அருள்நோக்கும் துணை கொண்டு திட்டம் வடிவமைக்கப்பட்டது. பொருத்தமான இடத்தை அடையாளம் காண்பதில் ஈப்போ சைவ சித்தாந்த மாணவர் மருத்துவர் பழனியப்பன், வழக்கறிஞர் கமலநாதன் மற்றும் சிலர் உடன் இருந்தனர். ஈப்போ, தஞ்சோங்மாலிம் போன்ற இடங்களில் காணப்பட்ட இடங்கள் சிறுசிறு குறைபாடுகள் உடையதாய் இருந்தன. முயற்சி தொடர்ந்தது. கிள்ளான் சித்தாந்த வகுப்பு மாணவர் திருவாளர் ரகு, விஜயன், வழக்கறிஞர் ரவிச்சந்திரன் ஆகியோரும் நிலத்தைக் கண்டறிவதில் உடன் சேர்ந்தனர். இறுதியில் மே 4ஆம் நாள் 2017ஆம் ஆண்டு கெர்லிங் மாவட்டத்தில் பொருத்தமான இடம் கண்டறியப்பட்டுக் கையகப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில் சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரியம் (Yayasan Falsafah dan Institusi Saiva) என்னும் அறவாரியம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நிறுவனச் செயலாளர் திருவாளர் இராமநாதன் அவர்களின் நிறுவனம் ( K. RAMANATHAN & CO) வழி அறவாரியம் அமைக்கப்பெற்றது. தொடர்புடைய அமைச்ச அங்கீகாரமும் வழங்கியுள்ளது. இன்று வரை இந்த நிறுவனமே அறவாரியத்தின் அதிகாரபூர்வ நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதோடு கணக்குத் தணிக்கையாளராயும் செயல்பட்டு வருகின்றது.
முனைவர் ஐயாவின் சித்தாந்த வகுப்பு மாணவர் அணியின் திருப்பணியாகவே நிலத்திற்கு வேண்டிய முழுத் தொகையும் கிடைத்தது. நிலத்திற்கு உண்டான முழுத் தொகையும் செலுத்தப்பெற்று நிலச்சான்று (பட்டா) அறவாரியத்தின் பெயரில் பதிவு செய்யப்பெற்றுள்ளது.
நிலத்தில் திருக்கோயில் மற்றும் கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. நில அளவைப் பணிகளைத் தொடர்ந்து கோலாலம்பூரில் உள்ள எச்எம்எஸ்கே (HMSK) என்னும் வடிவமைப்பு நிறுவனத்தார் திட்ட வடிவமைப்புப் பணிகளை முடித்து நகர் மேம்பாட்டாளர் பார்வைக்கு அனுப்பியுள்ளனர். திட்டம் தொடர்பான அரசுத் துறைகளின் அனுமதி பெறுவது முதலான காட்டுமானப் பணிகள் அனைத்தும் எச்எம்எஸ்கே நிறுவனத்தார் மேற்கொள்வர்.
திருக்கோயில், கல்லூரி, அரங்கம் ஆகிய மூன்று கட்டங்களில் நிறைவேறவிருக்கும் கட்டுமானப் பணிகளுக்கு கிட்டதட்ட ரிம. நாற்பது மில்லியன் (4 கோடி) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முற்றிலும் சைவ ஆகமங்களின் அடிப்படையில் அமையவிருக்கும் திருக்கோயிலும் பசுஞ்சோலையில் நவீன அமைப்பில் அமையவிருக்கும் சைவக் கலைக் கல்லூரியும் உலகின் சைவச் சிந்தனையாளர் அனைவரின் உயிர்த் துணையாகும், சைவத்தின் அழகிய மையமாகும்.
அனைத்தும் சிவபெருமானின் திருவருளாலும் நால்வர் பெருமக்களின் அருள் நோக்காலும் நிறைவேறி வருகின்றன. இந்துக்களும் சைவ அன்பரும் இத்திருப்பணி இனிதே நிறைவேறிச் சைவம் தழைக்க உதவ வேண்டும். அனைவரின் சிவகாணிக்கையும் சிறு துளி பெரு வெள்ளமாகப் பெருக வேண்டும். ‘மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்’!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
நோக்கம் & குறியிலக்கு
நோக்கம்
மலேசிய இந்துக்கள் மற்றும் சைவர்களின் சைவ சமய அறிவையும் உணர்வையும் வளப்படுத்துவதோடு ஒருங்கிணைந்த தனிமனித ஆளுமையை மேம்படுத்துதல். இதன்வழி மேம்பட்ட மனித நேயம், நன்னெறி, நற்சிந்தனை, உடல், உள்ள உறுதி ஆகிய பண்புகளைக் கொண்ட சிறந்த மலேசியரை உருவாக்குதல்.
குறியிலக்கு
முதல் கட்டம்
சைவ ஆகமங்களின் அடிப்படையில் எடுத்துக்காட்டாக விளங்கும் சைவத் திருக்கோயில் ஒன்றை எழுப்புதல். இக்கோயில் சைவக் கிரியைகள் தொடர்பான அறிவைச் செயல்முறையில் வழங்கும். சைவ சமயத்தின்பால் ஈடுபாட்டையும் பத்தியுணர்வையும் பெருக்கும் போக்கில் திருக்கோயிலின் செயல்பாடுகள் அமையும்.
இரண்டாம் கட்டம்
-
திட்டத்தின் இரண்டாம் கட்டமாகச் சைவக் கல்லூரி ஒன்று அமைக்கப்படும். மாணவர் முழு நேரம் தங்கிப் பயிலும் வகையில் கட்டமைப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன. கண் கவரும் இயற்கைச் சூழலில் பசுமையான சோலைகளுக்கிடையில் பயிற்சிக் கூடங்கள் அமையும். என்றாலும் கல்லூரியின் நவீனத்துவம் போற்றப்படும்.
-
சைவ ஆகமம், சைவ சித்தாந்தச் சாத்திரம், திருமுறை, திருமுறைப் பண்ணிசை, தமிழர் மரபு சார் இசைக் கருவி, நடனம், நாடகம் போன்றவற்றில் பயிற்சி வழங்கப்படும. சைவக் கல்வியுடன் கணக்கியல், தொடர்பியல் போன்ற உலகியல் கல்வியும் தமிழ், மலாய், ஆங்கிலத்தில் உயர்நிலை மொழிக் கல்வியும் வழங்கப்படும்.
-
இயற்கை வேளாண்மை செயல்முறைக் கல்வியாக வழங்கப்படும்.
மூன்றாம் கட்டம்
ஆயிரத்து ஐநூறு பேர் அமரத் தக்க அரங்கம் ஒன்று அமைக்கப்படும். சைவ அறவாரியத்தின் மாநாடு போன்ற பொது நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும். சைவ அறவாரியத்தின் நோக்கங்களுக்கு முரண்படாத புற நிகழ்வுகளுக்கு இடமளிப்பதன் வழி சமூகங்களுக்கிடையிலான நல்லுறவு பேணப்படும்.
மூன்று கட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கான உத்தேச மதிப்பு கிட்டதட்ட 40 மில்லியன் மலேசிய ரிங்கிட்.
தோற்றுநர்
மலேசிய சைவ சமயப் பேரவையின் தலைவராகச் செயலாற்றி வரும் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் தாம் நடத்தி வரும் சைவ சித்தாந்த வகுப்புகளில் பயிலும் மாணவரின் துணையுடன் பேரவையின் ஆதரவு இயக்கமாகச் சைவத் திருகோயில் கலை கல்வி அறவாரியத்தை உருவாக்கியுள்ளார்.
அறவாரிய இயக்குநராக முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்களுடன், திரு ரவிசந்திரன், டாக்டர் பழனியப்பன், திரு பொன் தேன்செல்வன், திரு விஜயன், திரு ரகுநாதன் ஆகியோரும் செயலாற்றி வருகின்றனர்.
அறவாரியத்தின் நிறுவனச் செயலாளராக K. Ramanathan & Co. என்னும் நிறுவனத்தின் திருவாளர் இராமநாதன் பணி புரிந்து வருகிறார். அறவாரியத்தின் தலைமை அலுவலராக திருமதி அனிதா விஜயன் பணியாற்றுகிறார்.